யோக்சியர் (Yorkshire), ரொதகாம் பகுதியில் 29/03/2026 அன்று மிதுசா நந்தகுமார் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் மிகவும் சிறப்பாகவும், அரங்கு நிறைந்த காட்சிகளாகவும் நடைபெற்றது. செல்வி மிதுசா நந்தகுமார் அவர்களுக்கு யோக்சியர் தமிழ்ச் சமூகம் (YTC) சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.














யோக்சியர் தமிழ்ச் சமூகத்தின் ஆசியுரை
ஆடல் வல்லான் ஆடலரசன் நடராசப் பெருமானின் அருளாசி பெற்று, பரதநாட்டியக் கலையை முறையாகப் பயின்று, அதில் “நாட்டிய கலை யோதி”, “நாட்டிய கலா ரத்னம்” மற்றும் “நாட்டிய முதுமாணி” (Postgraduate Diploma) போன்ற பட்டங்களைப் பெற்று, இன்று முழுமையாகத் தனது நடன அரங்கேற்றத்தை நிகழ்த்தியிருக்கும் எம் மண்ணின் மகள் மிதுசா நந்தகுமாரை வாழ்த்துவதில் YTC சமூகம் பெரும் மகிழ்ச்சியடைகிறது.
எமது YTC அமைப்பின் நீரோட்டத்தில், பல மேடைகளில் ஒரு நடனக் குழந்தையாகத் தோன்றி, பரத நாட்டிய மங்கையாக மிளிர்ந்து, இன்று ஒரு நடன ஆசிரியையாக நீங்கள் அடைந்துள்ள இந்த வளர்ச்சியை எண்ணி நாங்கள் உள்ளபடியே பெருமிதம் கொள்கிறோம்.
தாங்கள் சிறு வயது முதல் பரதக்கலை மீது கொண்ட காதலால், புலம்பெயர் தேசத்தின் நேரமின்மை, கல்விச் சுமைகள் மற்றும் பல சவால்களுக்கு மத்தியிலும் உங்களை ஒரு நடன வித்தகியாக உருவாக்கிய உங்களையும், அதற்குத் துணையாக நின்ற உங்கள் பெற்றோர்களையும், உங்களுக்குக் கலை பயிற்றுவித்த குருக்களையும் பாராட்டுவதில் நாம் பேருவகை அடைகிறோம்.
உங்கள் தந்தை எம் தலைவன் மீது கொண்ட பற்றினால், உங்களுக்குள் தாயக மண் வாசனை ஊட்டி வளர்த்தார். அதன் பயனாக, எமது முதற்பெண் புலி மாலதியின் பெயரில் ஒரு நடனப் பள்ளியை உருவாக்க வேண்டும் என்ற உங்கள் உயரிய சிந்தனையையும் எண்ணத்தையும் எண்ணி நாம் மீண்டும் பெருமகிழ்ச்சியும் மனப்பூரிப்பும் அடைகிறோம்.
கலைத்துறையில் பல சாதனைகளைச் செய்யக் காத்திருக்கும் உங்களை, என்றும் எம் YTC சமூகத்தின் மகளாக வாழ்த்துவதில் பெருமை கொள்கிறோம்.
வாழ்க வளமுடன்!
